கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியா அறிந்துகொள்ளாமல், கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது. இது குறித்த பெண்ணுக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதின்ம வயதுடைய தாய்க்கு குருதிச்சோகை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குழந்தையை சரியான விதத்தில் கவனிக்காத பட்சத்தில் அந்த குழந்தை நிறை குறைவாக பிறக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் அந்த குழந்தைக்கு பின்னாளில் சில சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.
சமூகத்திலே 16,17,18 வயதுகளை கொண்ட பெண்கள் கர்ப்பமடையும்போது வித்தியாசமாவும், வரவேற்கப்படாத விடயமாகவும்தான் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் சரியான பராமரிப்புகளையோ, சேவைகளையே குடும்பத்திடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறாக காணப்படும் போது அவர்களுக்கு ஒரு உளவியல் தாக்கம் ஏற்படும்.
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் பதின்ம வயதுப் பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் கர்ப்பமடைகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்பு கர்ப்பமடையும்போது அந்த கர்ப்பத்தை அழித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இலங்கையை பொறுத்தவரை கர்ப்பம் அழித்தல் என்பது சட்டவிரோதமானது. இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்போது அதுவும் அவர்களிடத்தில் உடல், உள தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அதற்கான குடும்ப கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும்.
இப்போது இலங்கையை பொறுத்தவரையில் குடும்ப சுகாதார நல மாது என்பவர் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றார். அவர்களை அணுகுவது மிகவும் இலகுவானது. இப்போது ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் தாராளமாக உள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை பெற முடியும். தங்களுக்கு ஏற்றவாறான கர்ப்பத்தடை முறைகளை பாவிக்க முடியும்.
கர்ப்பத்தடை முறைகளை பாவிப்பது குறித்து நிறைய பிரச்சனைகளும், சந்தேகங்களும் மக்களிடையே காணப்படுகின்றன. கர்ப்பத்தடை முறைகள் மிகவும் பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதுமான விடயமும் ஆகும். கர்ப்பத்தடை முறைகளை பயன்படுத்தி நிறுத்திய பின்னர் அவர்கள் கர்ப்பமடைவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் கர்ப்பமடைவார்கள்.
பதின்ம வயது பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் அதனை அழிக்கவோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடவோ கூடாது. இலங்கையை பொறுத்தவரையில் தாய் – சேயுடன் இருக்கின்றபோது கருக்கலைப்பு செய்கின்ற நிலைகள் இருக்கின்றது. இது சட்டவிரோதமானது. இதனால் கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்பேது அங்கு சகலவிதமான சேவைகளும் வழங்கப்படும். அந்தரங்கத்தன்மை பேணப்பட்டு, காத்திரமான சேவை வழங்கப்படும். சரியான முறையில் அவர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே இந்த பதின்ம வயது கர்ப்பம் என்பது தாய்மார்களிடத்தும், பெண்களிடத்தும், சமூகத்திலும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நாங்கள் இதுகுறித்து சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.