“பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் ஆதங்கம் நியாயமானது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பை எதிர்மறையான ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை. அவரால் தெரிவிக்கப்படும் விடயங்கள் நியாயமானவையாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மனதளவில் பாரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அந்தச் சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அது பாரிய கவலையை அளிக்கும். அந்தவகையிலேயே கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேராயரின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகும். அரசு என்ற ரீதியில் எமக்கும் அதற்கான பொறுப்பு காணப்படுகின்றது.
எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கூறுவதை விட, அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும்.
கொலையாளிகளே இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம்.
எனவே, மீண்டும் அவற்றை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.” – என்றார்.