உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் நேற்று (08.03) தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜய சோமமுனி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, அசங்க மற்றும் பொலிஸ் கொன்ஸ்தாபில்களான சிந்நக்க, விதுசன், பொலிஸ் சாரதி திசாநாயக்க உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் வவுனியா, பாவற்குளம் படிவம் 2 பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு இடத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மான் கொம்புகளும் மீட்கப்பட்டன.
இதனையடுத்து அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், நீதிமன்றினால் இரண்டு பிடிவிறாந்து விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டார். குறித்த மூவரும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு உளுக்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், வவுனியா, கோவில்குளம் பகுதியில் மாடு திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பாவற்குளம் படிவம் 2 பகுதியைச் சேர்ந்த மேலும் இருவரும் இதன்போது மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின் உளுக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.