சில வளையொலியாளர்கள் (youtuber) மோசடிகளை செய்வதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் நாடாளுமன்றத்தில் காரசாரமான கருத்தினை முன்வைத்திருந்தார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான நிகழ்நிலை பாதுகாப்பு (online safety) என்பது இலங்கையில் இல்லை. சாதாரணமாக ஒரு பொலிஸ் நிலையத்தில் ஒரு பெண்ணோ அல்லது ஒரு சிறுவரோ சென்று முறையிடுவது என்பது மிகவும் கேவலமாக இருக்கின்றது.
தற்போது youtube கலாச்சாரம் ஒன்று இருக்கின்றது. அதிலே யாழ்ப்பாணத்தில் இருந்து YouTube காணொளி பதிவிடும் ஒருவர்தான் SK கிருஷ்ணா. இவர் இரவு வேளைகளிலே பெண்களின் வீடுகளுக்குள் சென்று, பெண் பிள்ளைகள் வெளியே வரமாட்டேன் மாட்டேன் என்று சொன்னபோது வற்புறுத்தி வெளியே வரவைத்து, உங்களுக்கு காதலன் இருக்கின்றாரா? முகத்தை காட்ட வெட்கம் என்றால் நீங்கள் என்ன ஐஸ்வர்யாராயா என்று கேட்டு, அவரது வீட்டின் அறைக்குள் புகுந்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த நபர் என்.பி.பியினுடைய பிரச்சார பீரங்கி. இது ஒரு கேவலமான விடயம்.
மற்றையவர் DK கார்த்திக் என்ற YouTube செய்பவர். கிளீன் சிறீலங்கா என்று சொல்லப்படுகின்ற திட்டத்தை வடக்கில் மிகவும் பிரபலமாக கொண்டு செல்பவர் இந்த DK கார்த்திக். இவர் சம்பந்தமான மிகப்பெரிய ஊழல்கள் வந்திருக்கின்றன. அது சம்பந்தமான எழுத்து மூலமான அறிக்கை அமைச்சரிடம் தருகிறேன், நீங்கள் அது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்.
பெண்கள் என்று நாங்கள் கதைக்கும் போது ஞாபகத்திற்கு வருவது வடக்கு கிழக்கில் இருக்கின்ற பெண்களும் தேயிலை கொழுந்து பறிக்கின்ற தெய்வங்களும் தான். இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அமைச்சரே நீங்களும் ஒரு பெண் எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
SK கிருஷ்ணா, DK கார்த்திக் தொடர்பான முழு முறைப்பாடுகளையும் எழுத்தில் தருகிறேன். எத்தனையோ வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று அதனை காணொளி எடுத்து பதிவு செய்து, புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற கிடைக்கின்ற நிதிகள் மூலம் தாங்கள் வீடு கட்டுகின்றனர். இது சம்பந்தமாக முறைப்பாடுகளை தங்களிடம் எழுத்தில் தருகின்றேன் என்றார்.