“தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வேலையை முன்னெடுக்கும்போது வடக்கு மாகாணத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றோம். வடக்கில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மீள இயக்கியே தீருவோம்.” – இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெரிய தொழிற்சாலைகளுக்கு முன்னால் நின்று பேச வேண்டிய நாங்கள் காடுகளுக்கு உள்ளே நின்று பேச வேண்டிய சூழ்நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கின்றோம். 1990 ஆம் ஆண்டுகளில் இவ்வாறான ஒரு தொழிற்சாலை இருந்ததா என்று பார்க்கின்றபோது ஆச்சரியமாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு மகிமையான தொழிற்சாலை இருந்த இடம் இன்று காடுகள் மண்டி கிடக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் இந்த பிரதேசத்தை மாத்திரம் அல்ல நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வேலையை முன்னெடுக்கும் போது வடக்கு மாகாணத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றோம். வடக்கில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மீள இயக்கியே தீருவோம்.”
அந்தவகையில் முதலாவது வேலை திட்டமாக தமிழர்களுடைய அபிமானத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற காங்கேசன்துறை தொழில்பேட்டையை நவீனமயமாக எவ்வாறு கையாள்வது எவ்வாறு மீளப் புனர்நிர்மானம் செய்வது என்பதை ஆராயவே மூன்று அமைச்சர்கள் கலந்துகொண்டு இந்த வேலைகளை ஆய்வு செய்துள்ளோம்.
அவ்வாறு ஆய்வு செய்கின்ற அரிய வாய்ப்பு அரிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு புதிய ஒரு உலகத்துக்கு செல்ல வேண்டிய தேவை எமக்குள்ளது. மீண்டும் மீண்டும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இளைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கையில் வடக்கு மாகாணத்தை வேறொரு தரத்திற்கு உயர்த்தி வைப்பதற்கான செயற்பாடுகளை எங்களுடைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதற்காக கூடுதலான நிதி ஒதுக்கீடுகளையும் எங்களுடைய அரசாங்கம் செய்திருக்கின்றது.
நம்பிக்கை இழந்ததன் காரணமாக எங்களுடைய இளைஞர்கள் அனைவரும் நாட்டை விட்டு ஓடுகின்ற நிலைமையை நிறுத்த வேண்டும் என்றால் நாளைக்கு இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற மனநிலை உருவாக வேண்டும் என்றால் நிச்சயமாக நாங்கள் கைத்தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவும் அதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்காகவும் விசேடமாக காங்கேசன்துறை, பரந்தன், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு, மாங்குளம் போன்ற பிரதேசங்களை முக்கோணத் திட்டத்தில் எதிர்வரும் காலத்தில் நவீன தொழில்நுட்ப வலயங்களாக மாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை இன்று ஆரம்பித்துள்ளோம்.” – என்றார்.