முல்லைத்தீவு மாவட்டசெயலகம் மற்றும் பிரதேசசெயலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக140 உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பித்தருமாறு பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசசபையின்கீழ் காணப்படும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை தனிப் பிரதேசசபையாக உருவாக்குமாறும், மாவட்டசெயலக கட்டடவேலையின் இரண்டாங்கட்ட பணிகளையும் விரைந்து ஆரம்பிக்கமாறும் இதன்போது மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (04.03.2025) இடம்பெற்ற பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் குழுநிலைவிவாதத்தில் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.
பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களே, முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 6பிரதேச செயலாளர் பிரிவுகள்காணப்படுவதுடன், 136 கிராமஅலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் 25மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு சொல்லப்படுகின்றது. வறுமையில் முதலாவது அல்லது இரண்டாவது என்ற இடத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளடக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேசச்செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. எனினும் நான்கு பிரதேசசபைகளே உள்ளன. மக்கள் அதிகமாகவும், நிலப்பரப்பு கூடுதலாகவும் உள்ள இரண்டு பிரதேச செயலகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பிரதேசசபையாக இருக்கின்ற நிலமையானது அந்தந்த பிரதேசசெயலகப்பிரிவுகளின் மக்களை பாதிப்பதாக அமைகின்றது. குறிப்பாக புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் இரண்டு பிரதேசச்செயலாளர் பிரவுகளும் புதுக்குடியிருப்பு பிரதேசசபையாக இயங்குகின்றது.
வடக்கு மாகாணசபையின் காலத்திலிருந்தே இந்தக் கோரிகையை உரியவகையில் மக்களும், மக்கள் பிரதிகளும் வைத்துக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இன்றுுவரை இதற்கான தீர்வுகள் இந்தமக்களுக்கு கிடைக்கவில்லை. அந்த மக்களுடைய பிரதிநிதி என்ற வகையில் கேட்கின்றேன். இந்த விடயத்தில் தீர்வை வழங்கி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உதவுங்கள்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசதிணைக்களங்களில் ஆளணி விடயங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும், பிரதேச செயலகங்களின் தேவைப்பாடுகள், பிரச்சனைகள் காணப்படுகின்றன. இந்தக் குறைபாடுகள் தீர்க்கப்பட்டாலே மாவட்டத்தின் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும், பிரதேசசெயலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்கள்உட்பட, உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில் நிர்வாக சேவையில் இரண்டு வெற்றிடங்களும், கணக்காளர் சேவை மூன்று வெற்றிடங்கும், திட்டமிடல் சேவையில் ஆறு வெற்றிடங்களும், பொறியியல் சேவையில் ஒருவெற்றிடமும், முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 91 வெற்றிடங்களும், தொழில்நுட்ப அலுவலர் வெற்றிடங்களில் எட்டு வெற்றிடங்களும் காணப்படுகின்றன. ஆறு தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆறு சாரதி வெற்றிடங்கள், 17அலுவலகப்பணியாளர் வெற்றிடங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 140வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
கௌரவ அமைச்சர்அவர்களே மாவட்ட நிர்வாகத்தை சீராகவும், மக்களுக்கான சேவைகளை ஒழுங்கானமுறையிலும் செய்வதென்பது அனைத்து மாவட்டங்களுக்கும் அவசியமானதாகும். அதிலும் இவ்வாறான மிகவும் பின்தங்கிய மாவட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.
இன்னுமொரு விடயம் குறிப்பிடவே வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களில் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கடமைபுரிவவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
பணியாளர்கள் பற்றாக்குறை அதிலும் அதிகமானவர்கள் யாழ்மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இயலக்கூடிய அளவுக்கு நிறைவான சேவையை செய்து கொண்டிருக்கின்றார்கள், பெரிதும் சிரமப்படுகின்றார்கள். மாவட்டச்செயலாளர் உட்பட பணியாற்றும் உத்தியோகத்தர்களைப் பாராட்டுகின்றேன். அமைச்சர் அவர்களே, இந்தக்குறைபாடுகளைத் தீர்க்க உதவுங்கள்.
அடுத்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கட்டடவேலையின் முதலாம் கட்டம் கடந்த 2014ஆம்ஆண்டு பூர்த்தியடைந்து சுமார் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் அதனுடைய இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளமையால் அலுவலர்கள் இடவசதிஇல்லாமல் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.
இந்தக்குறைபாடுகள் உங்களுடைய ஆட்சியில் தீர்க்கப்பட வேண்டும். பெயரளவில் பின் தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு இலங்கையின் நிர்வாகமும் காரணம். இந்த புறக்கணிப்புகள் வேண்டாம். 25 பேரும் உங்களது பிள்ளைகள்தான், அதாவது 25 மாவட்டங்களும். எல்லோரையும் சமமாகப் பாருங்கள்.
கெளவ அமைச்சர் அவர்களே உங்களுடைய செயல்களில் எமக்கு நம்பிக்தை உண்டு. நிலமைகள் சீராகும் என்று நம்புகின்றோம்.
இதுதவிர மாவட்டத்தில் பலதுறைகளிலும் இவ்வாறான குறைபாடுகள் உள்ளன. அந்தந்த அமைச்சுகளோடு பேசுகின்றோம். பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
எனவே அமைச்சர் அவர்களே தயவுசெய்து இந்தக் குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நான் வன்னி பாராளுமன்ற உறுப்பினர். இவ்வாறான குறைபாடுகள் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. எம்மை ஒதுக்கிவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.