“சாந்தன் துயிலாலயம்” இன்றையதினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் காலை 09 மணிக்கு, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள “சாந்தன் துயிலாலயம்” தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அரசாங்கங்களாலும், அரசியலாலும், சட்டத்தாலும் , கடவுள்களாலும் 33 ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட ஒரு தாயின் ஏமாற்று அடையாளமாக இந்த துயிலாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலமானார்.
அவரது விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் 33 வருடங்களாக போராடி வந்தனர். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரை, மீள இலங்கைக்கு அழைத்து வர குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வருட காலமாக போராடினார்கள்.
தமிழ் அரசியல் வாதிகள் பலரும் பாரமுகமாக செயற்பட்ட நிலையில் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் முதல் இந்திய அரசியல் தலைவர்கள் வரை சாந்தனின் விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் மன்றாடி வந்த நிலையில், எவரும் கண்டுகொள்ளாத நிலையில், அவரது உயிரற்ற உடலையே இலங்கை கொண்டு வந்து அவரது சொந்த ஊரில் விதைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







