27.02.2025 ம் திகதியன்று வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் ஆற்றிய உரை
கௌரவ குழுக்களின் தலைவர் அவர்களே!
தலைப்பு எண் 13 இன் கீழான இந்த விவாதத்தின் கீழ் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பாக வருவதால் மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றி நான் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். கடந்த பாராளுமன்றத்திலும் இதே தலைப்பின் விவாதத்தில் நான் பங்கேற்றதை கௌரவ தலைமை உறுப்பினராகிய நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆணைக்குழுவின் செயற்பாடு மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து நான் சில சிக்கல்களை எழுப்பினேன்.
ஏனெனில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சில உறுப்பினர்களுடன் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். மற்றும் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்தார். அதன் பின்னர் அவரும் ஏனைய உறுப்பினர்களும் கொழும்புக்கு வந்தபோது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் பேசிய பின்னர், பாதிக்கப்பட்ட சமூகங்கள் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். நான் அதைக் கண்டித்து,, அது பொய் என்று மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளேன். கடந்த ஆண்டும் கூட முந்தைய வரவு செலவுத்திட்ட பாதீட்டின் போதும் இந்த கருத்தையே தெரிவித்தேன் என்பதற்காகவே இப்போதும் இதனைப் பதிவு செய்கிறேன்.
பொலிசார் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு. மற்றும் போலீஸ் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது குறித்து நம்பிக்கை வரவேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. அடக்குமுறையாக செயல்படுகிறது. அப்பிரதேச மக்களுக்கும், உண்மைக்கும் விரோதமாக செயற்படுகின்றது. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கனிஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானவர்கள் தண்டனை இடமாற்றங்களில் வடக்கு கிழக்கில் உள்ளனர்.எனவே மக்கள் மீதான இவர்களின் அணுகுமுறை மிகவும் மோசமாக காணப்படுகிறது. அவர்கள் தமிழ் மொழி பேச மாட்டார்கள். அவர்களினால் மக்கள் பாதிக்கப்படும் போது., பொலிசாரின் தவறான நடத்தைகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் என்று முழுமையாக நம்பினோம். அவர்கள் தலையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதுதான் உள்நாட்டு சூழலில் எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாகும். எனவேதான் முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறாக நடந்துகொண்ட போதும் நாங்கள் பிரச்சினைகளை எழுப்பினோம்.
கடந்த அரசாங்கத்தின் போது தையிட்டி என்ற இடத்தில் எமது கட்சியினரும் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு எதிராக போலீசார் தடை விதிக்க முயன்றனர். அவர்கள் போராட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு சென்றனர். ஆயினும், நீதவான் தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனாலும், போராட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் சில நிபந்தனைகளை விதித்தார். அந்த நிபந்தனைகளை நாங்கள் மிகவும் கவனமாக கடைப்பிடித்திருந்தோம். ஆனால் அதனையும் மீறி பலாலி ஓ.ஐ.சி யின் வழிகாட்டலின் கீழ் பலாலி பொலிஸார் எமது கட்சி உறுப்பினர்களையும் ஊடகவியலாளரையும் சட்டத்தரணியையும் கைது செய்திருந்தார். நீதிமன்றம் போராட்டத்துக்குத் தடை விதிக்கவில்லை என்று கூற அந்த இடத்துக்கு வந்திருந்த சட்டத்தரணியையும் கூட போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து எட்டு முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டன. அவை HR/JA /165 முதல் 172/ 2023 வரையிலான முறைப்பாட்டிலக்கங்களாகும். இந்த முறைப்பாடு சம்பவம் நடைபெற்ற குறித்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன.
பொலிசாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தபோது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய பிரதிநிதி பலாலி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துத் தானே நேரில் சென்று தகவல்களைத் தெரிந்துகொள்ள அவர் விரும்பியபோதும் பொலிசார் மறுத்திருந்ததோடு இடையூறுகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களையும் அச்சுறுத்தியிருந்தனர்.
அதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் வெளிவந்தனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு சென்று முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர். இன்றுவரை எந்தவொரு விசாரணையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படவில்லை. என்ன நடக்கிறது என நாம் தேடிய போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், அவர் எங்களுக்கு சார்பாகவே செயற்படுவார் என்று பலாலி ஓ.ஐ.சியால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாக அறிந்தோம். இதனால், பாதிக்கப்பட்டவர்களுடைய முறைப்பாட்டு கோப்பு கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகவும் அறிந்தோம். கோப்பு கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தபோதும் இன்று வரை விசாரணை நடைபெறவில்லை.
காவல்துறை அல்லது ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தின் நியாயத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால், அவர்களால் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நாங்கள் கருதும் போது, எங்களிடம் இருக்கும் ஒரே வழிமுறையாக மனித உரிமைகள் ஆணைக்குழுவையே நம்புகிறோம். ஆணைக்குழு நம்பிக்கையைக் கட்டியெழும்பும் விதமாக சுதந்திரமான முறையில் செயற்படவேண்டும்.. அது யாராக இருந்தாலும் சரி அவற்றுள் தலையிட வேண்டும். உங்களிடம் நீதிப்பொறிமுறை இருக்க வேண்டும், அந்த நீதிவிசாரணை உங்களிடம் இல்லையென்றால் அது ஒரு பிரச்சனையாகிவிடும். இதுவே கடந்த அரசாங்கத்தின் கீழும் இருந்தது.
அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதை இந்த அரசாங்கம் ஆணைக்குழுவிடம் வலியுறுத்த வேண்டும் என்பதைநான் வலியுறுத்துகிறேன். விசாரணைகளை பெறுமதியாக ஆக்குவதற்கும், அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் சட்டபூர்வமான தன்மை உள்ளது. அவ்வரறு நடக்கபோவதில்லையென்றால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
கௌரவ வெளியுறவு அமைச்சர் இப்போது ஜெனிவா சென்று அறிக்கை வெளியிட்டார். நிலைமாறுகால நீதியைப் பற்றி தெரிவித்தார். காணாமல் போனவர்களின் அலுவலகத்தை பலப்படுத்தப் போவதாகவும்,. இழப்பீடு அலுவலகத்தை வலுப்படுத்துவதாகவும்,. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை வலுப்படுத்துவதாகவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை சட்டரீதியாக உருவாக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் நடைபெற்ற விடயங்களுக்கான தீர்வு குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை, குற்றவியல் நீதி பற்றி ஒரு வார்த்தை இல்லை. நிலைமாறுகால நீதிக்கு குற்றவியல் நீதித்துறையில் குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குகள் மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் பேசியதெல்லாம் மூடிமறைக்கும் செயற்பாடாக மட்டுமே அமையும். நீங்கள் மறைப்பதற்கே முயற்சிக்கிறீர்கள். இனப்படுகொலை செய்தவர்கள் மீது வழக்குத் தொடராமல், அதை மறைக்கப் பார்க்கிறீர்கள்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தற்போதைய ஜனாதிபதி அவர்கள் போர்க்கால அட்டூழியங்களுக்கு எதிராக ஒரு வழக்கு கூட தொடர முடியாது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதை அவர் பலமுறை பொதுவெளிகளிலும் சொல்லியிருக்கிறார். இதனாலேயே நான் இதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
அப்படியானால் வெளிவிவகார அமைச்சர் கூறும் இந்தக் கருத்துக்கள் என்ன?
அவர் உண்மையில் சொல்வது என்னவென்றால், பொறுப்புக்கூறல் இருக்கப்போவதில்லை என்பதையே கூறுகிறார். அது மறைக்கப்படும் என்றே கூறுகிறார். ஆனால் சில ஆணைக்குழுக்கள் மட்டும் இருக்கும் என்றே கூறுகிறார்.
அவர்கள் அழும்படி கேட்கப்படுவார்கள். மக்கள் அழுவார்கள். பின்னர் அவர்கள் கட்டியணைத்து முத்தமிடவேண்டும் என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், இது கவலைக்குரியது.
ஏனெனில் இது முந்தைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியத அதே விடயம்தான்.
இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற்போனோர் அலுவலகம் என்பவை மூடிமறைப்பதற்காகவும், வழக்குத் தொடரப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவுமே அமைக்கப்பட்டதாக அவர் அதை பற்றி பெருமையாக கூறியிருந்தார். .
அவ்வாறு தான் நீங்களும் செய்யப்போகிறீர்களாயின், நீங்கள் ஆட்சிக்கு வரும்போது, அமைப்பு மாற்றம் என்று சொல்லி இருக்க முடியாது. நீங்கள் அதே நோக்கங்களையே கொண்டிருக்கிறீர்களானால் அது என்ன அமைப்பு மாற்றம்?
எனவே தலையீடு குறித்து விவாதிக்கப்படும் விடயங்களில் ஜனாதிபதி நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டுமானால் அவர் இதனை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கம் உண்மையில் அந்த அமைப்பு மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என்று வடக்கு கிழக்கு மக்கள் உண்மையாக நம்பவேண்டும். அப்படியில்லையாயின் நீங்கள் அமைப்பு மாற்றம் என்று சொல்ல முடியாது. முந்தைய அரசாங்கங்கள் செய்ததைப் போலவே நீங்களும் செய்வீர்களாயின் தவறிழைக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும்.