முகநூலில் ஏற்பட்ட நட்பு மூலம் நண்பர் ஒருவர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,
முகநூலில் மாக் என்பவரின் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார். அவர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார். 2024 மே 31 அன்று எனது முகவரியை கேட்டார்.
முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் அதற்கு எனது முகவரி தேவை எனக் கேட்டார். இதனடிப்படையில் நான் எனது முகவரியை Whatsapp இல் அனுப்பினேன்.
மே மாதம் 31 மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் இருந்து தகவல் வரும் என தகவல் அனுப்பினார்.
பின்னர் கொழும்பு டெலிவரி ஏஜன்ட் என்று ஒருவர் மெசேஜ் அனுப்பினார். CLEARANCE FEE 95000/- அனுப்பும்படி கூறினார். இதற்கு நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன். அப்போது முதலில் பொதி சம்மந்தமாக கதைத்த மார்க் சிமித் என்பவர் எவ்வளவு பணம் இருக்கிறது என தொடர்பு கொண்டு கேட்டார்.
நான் பணம் இல்லை எனக் கூறினேன். பின்னர் 35000/- ரூபா வங்கிக்கு அனுப்ப சொல்லி வங்கி இலக்கத்தை தந்தனர் பின்னர் 40000 ரூபா போடும்படி சொன்னார். இதனடிப்படையில் 03/06/2024 அன்று ரூபாய் 40000 ஐ வங்கி கணக்கில் வைப்பிலிட்டேன்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிற்பதாகவும் பொதி ஸ்கான் செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும் பொறிக்குள் DOLLERS இருப்பதாகவும் அது ஒரு பெரிய தொகை என்றும் கூறி தான் அனுப்பும் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பும் படியும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பயமுறுத்தினார்.
பின்னர் ரூபாய் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடச் சொன்னார். அடுத்த நாள் பொதிக்கு INSURANCE COVERAGE இல்லை அதற்கு ரூபா 48 ஆயிரம் வைப்பிலிடச் சொன்னார்.
இவை அனைத்தையும் நான் இவர்கள் தந்த கணக்கிற்கு வைப்பிலிட்ட பின்னர் எனது பெயரில் பொதி வந்தால் பெரிய பிரச்சினை என்றார்கள்.
தை மாதம் 07 ம் திகதி மார்க் அண்டர்சன் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
லண்டனில் இருந்து கொழும்பு வந்து வேலை செய்வதாக கூறினார். ரூபா இருபது லட்சம் வங்கியில் வைப்பிலிட்டால் 24 மணி நேரத்துக்குள் பொதியை வழங்குவதாக கூறினார்.
இதற்கு ஆதாரமாக தனது பாஸ்போர்ட் போட்டோவை அனுப்பி வைத்தார். அதனை நம்பி அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு நான் இருபது லட்சம் ரூபாவை வைப்பிலிட்டேன். பின்னர் Airport delivery charge என கூறி ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வைப்பிலிடச் சொன்னார் அதையும் வைப்பிலிட்டேன்.
தற்போது மேலும் ஒருவர் பொதியை தருவதாக கூறி மேலும் 30 லட்சம் ரூபாயினை கேட்டு மிரட்டுகின்றனர்.
பொதி வருகிறது என கூறி இதுவரை 29 லட்சத்து இருபதாயிரம் ரூபாயினை மோசடி செய்து மேலும் என்னை பணம் தர சொல்லி மிரட்டுகின்றனர்.
என்னைத் தொடர்புகொண்ட இலக்கங்கள் மற்றும் வங்கியில் வைப்பிலிட்ட விபரங்கள் என அனைத்தும் என்னிடம் உள்ளது. எனவே மேற்படி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தி இழந்த எனது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ள நிலையில் சகல ஆவணங்களுடனும் முறைப்பாடு வழங்குவதற்காக வருகை தருமாறு பொலிஸார் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.


