கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையினரால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடம் கடந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாது கால்நடைகளின் தங்குமிடமாகவும் பற்றைக் காடாகவும் காட்சியளிக்கின்றது.
இவ் வைத்தியசாலையானது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16 கிராம மக்கள் பயன் தரக்கூடிய வகையில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலை என புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இருந்த போதிலும் இன்றுவரை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இதனை மிக விரைவில் மக்களினது பாவானைக்கு கையளிக்க வேண்டுமென இப்பகுதியில் வாழும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது அதிகமானோர் ஆயுர்வேத வைத்தியசாலையே நாடி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது புதுக் குடியிருப்பு, பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே அதிகளவான பணத்தினை செலவழித்து தனியார் வாகனத்தை வாடகைக்கு பெற்று அப்பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எமது பகுதியில் ஆயுர்வேத வைத்தியசாலையை வைத்துக்கொண்டு வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது ஆயுர்வேத வைத்தியசாலையை எமது பயன்பாட்டுக்கு விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.




