இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சித்தர்களால் ஆலயத்திற்கு ஸ்தாபிக்கப்பட்ட உயிர் லிங்கத்துக்கு அடியார்களின் கைகளினால் அபிசேகம் செய்யும் நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு பால புஷ்கரனில் இன்று காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்களினால் விசேட பூஜைகள் நடைபெற்று ஆலய தலைவர் மற்றும் பக்தர்கள் குளத்தில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
பெருமளவான பக்தர்கள் தீர்த்தம் தாங்கிய வகையில் ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தது ஆலயத்தில் உள்ள உயிர்லிங்கத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று அபிசேகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று பகல் வரையில் பக்தர்கள் தங்களின் கரங்களினால் லிங்கத்திற்கு அபிசேகம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மாலை விசேட யாக பூஜை மற்றும் அபிசேக பூஜைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








