கனடா வள்ளுவம் அமைப்பின் வழிகாட்டல் மற்றும் நிதி அனுசணையின் கீழ் இயங்கிவரும் கருங்காலிச்சோலை வள்ளுவம் மட்டி தொழிலாளர் குடும்ப மேம்பாட்டு அமைப்பின் பொங்கல் விழா 22.02.2025 சனிக்கிழமை இடம்பெற்றது.
கருங்காலிச்சோலை வள்ளுவம் அமைப்பின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கருங்காலிச்சோலை கிராமத்தின் கிராமசேவையாளர் திரு. வரதராஜன் ஐயா, பிரதேசத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.அ. அழகுராஜ் , கல்குடா யோகா வள நிலைய பொறுப்பதிகாரி, கருங்காலிச்சோலை வள்ளுவம் மாணவர்கள், பெற்றோர்கள், இளம் பெற்றோர் குழுவினர், மற்றும் ஆண்கள் குழுவினர் என்போர் கலந்துகொண்டனர்.
கலாச்சாரப் பொங்கல் பொங்குதல், சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், பெற்றோர் கலை நிகழ்ச்சிகள் என்பவை நிகழ்வை அலங்கரித்தன. அத்தோடு கனடா வள்ளுவம் அமைப்பினால் நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டியில் வெற்றியீட்டிய சிறார்களுக்கும், பெற்றோர்களுக்கும் சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கருங்காலிச்சோலை கிராமத்தில் வசிக்கும் மட்டி தொழிலை மெற்கொள்ளும் குடும்பங்களின் அபிவிருத்தியை மையமாக கொண்டே வள்ளுவம் கனடா அமைப்பு கருங்காலிச்சோலை வள்ளுவம் அமைப்பை செயற்படுத்தி வருகின்றது. மேலும் இவ் அமைப்பின் மூலம் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த இலவச மாலை நேர வகுப்புக்கள் நடாத்துதல், பெற்றோர் விழுப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்துதல் என்பவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அத்தோடு அவர்களின் மேம்பாடு குறித்து இனி வரும் காலங்களில் வீடு, மலசலகூடம் போன்ற அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய செயற்த்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





