மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் இன்று (22) பல தீர்மானங்களை எடுத்துள்ளது.
இதற்கிடையில், மீனகயா கடுகதி ரயிலில் மோதி சிகிச்சை பெற்று வந்த யானை குட்டியொன்று நேற்று (22) மாலை உயிரிழந்தது.
கடந்த 20 ஆம் திகதி இரவு மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்தில் கவுடுல்ல வனப்பகுதியில் இருந்து பயணித்த யானைக் கூட்டம் ஒன்று மீனகயா கடுகதி ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஏழு காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து ஆறு யானைகள் உயிரிழந்ததுடன், மூன்று வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி ஒன்று படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தது.
இருப்பினும், நேற்று மாலை, குறித்த யானைக் குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
யானைக் குட்டியின் உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்ட கவுடுல்ல தேசிய பூங்கா மற்றும் கிரிதலே வனவிலங்கு அதிகாரிகள், யானைக் குட்டி ரயிலில் மோதி அதன் முதுகில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்ததாகக் கூறினர்.
அதன்படி, அந்த கூட்டத்தைச் சேர்ந்த அனைத்து காட்டு யானைகளும் ரயில் விபத்தில் உயிரிழந்தன.
மின்னேரிய – ஹபரண ரயில் மார்க்கத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து வந்து செல்லும் ஒரு பாதையாகும்.
இருப்பினும், ரயில் சாரதிகள் கவனமாக ஓட்டுவதால், ரயில்களில் யானைகள் மோதும் சம்பவங்களைத் தடுக்க முடியும்.
எனினும், இந்த விபத்துகளைத் தடுக்க எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் இன்று கவுடுல்ல தேசிய பூங்காவில் நடைபெற்றது.
வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி.சரத், ரயில்வே அதிகாரிகள், பதில் வனவிலங்கு பணிப்பாளர், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் சிறப்பு ரயிலில் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்தின் கல்ஓயா மற்றும் ஹிங்குரக்கொடை வரையிலான பகுதியை ஆய்வு செய்தனர்.
வேகமாக வந்த ரயிலில் மோதி காட்டு யானைகள் கூட்டம் இறந்தது தொடர்பாக, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் மற்றொரு கட்டமாக இந்தக் ஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
“இந்த முறை, யானைகளை பார்க்கும் வகையில் இருபுறமும் 15-20 அடி தூரம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கலந்துரையாடினோம். அந்த யானைகள் ரயிலைக் கண்டால் உடனடியாக நகர முடியாது. எனவே இதனை செய்ய தீர்மானித்தோம். காவலரண், சோலார் பேனல்களைப் பயன்படுத்தி அதை ஒளிரச் செய்வது, யானைகள் கடக்க கவுடுல்ல மற்றும் மின்னேரியா இடையே யானை வழித்தடத்தை உருவாக்குவது, தேவையான நிலத்தைத் தயார் செய்வது மற்றும் இதற்கு போதுமான மனித வளங்களை ஈடுபடுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நாங்கள் தீவிரமாக விவாதித்தோம்.” என்றார்.