“தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரிய வகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் தனித்தனியே சந்தித்து இன்று வெள்ளிக்கிழமை காலை கலந்துரையாடினர்.
கொடுப்பனவுகளை அதிகரித்தல், இடமாற்றங்கள் தொடர்பில் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளாலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்போது கொடுப்பனவு அதிகரிப்பு மீளாய்வுக்கு இணக்கமும் தெரிவிக்கப்பட்டது. இடமாற்றங்களும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் ஆராய்ந்து முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பாராட்டினார். அத்துடன் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சிறப்பாகச் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரை சான்றிதழ் வழங்கவும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தார்.
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தமது திருத்தப்பட்ட சேவைப்பிரமாணக் குறிப்பு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தது. மேலும் மூன்றிலொரு பகுதி ஆளணி வெற்றிடமாகவுள்ள நிலையிலும், தம்மிடமிருந்து நூறு சதவீத சேவை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இது சாத்தியமில்லாத விடயம் எனவும் தெரிவித்தனர்.
வதிவிடப் பயிற்சிநெறி நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். ஆளணி வெற்றிடத்துக்கு சில மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதுடன் வதிவிடப் பயிற்சிநெறியை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.
கூட்டுறவில் ஒரு காலத்தில் வடக்கு மாகாணம் கொடிகட்டிப் பறந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போது அது பின்னடைவான நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
அதை உயர்த்தும் பொறுப்பு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உண்டு. சமூகப்பொறுப்புடன் செயலாற்றவேண்டும். அதேபோல இன்னும் வினைத்திறனாகச் செயற்பட எவ்வாறான சட்டத்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதையும் பரிந்துரைக்குமாறு ஆளுநர் இதன்போது கோரினார்.
வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்தால் கோரப்பட்ட தளபாட வசதிகள், காகிதாதிகள் என்பனவற்றை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
மேலும் களத்தரிசிப்பு கொடுப்பனவு தொடர்பில் நிலவும் முரண்பாடுகளை சீர்செய்யவும் உறுதியளிக்கப்பட்டது.
தேசியமட்ட நிலைப்பாட்டுக்கு அமைவாக ஆசிரிய வளவாளர்கள் என நியமிப்பதை விடுத்து பதில் ஆசிரிய ஆலோசகர்கள் என்ற பதவி நிலைக்கு நியமிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம் வெளியிட்டார்.
இந்தச் சந்திப்புக்களில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறி, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலர் பொ.வாகீசன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – நிர்வாகம் திருமதி எ.அன்ரன் யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – பொறியியல் சேவை எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.








