வாய்க்கால் ஓரத்தில் நடப்பட்ட மரங்களை கட்டக்காலி மாடுகளிடம் இருந்து பாதுகாக்கவே வலை வேலி: நிலம் அபகரிக்கப்படவில்லை என உதவிப் பிரதேச செயலாளர் விளக்கம்
தனது வீட்டு மதிலின் முன் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் நடப்பட்ட மரங்களை கட்டாக்காலி மாடுகளிடம் இருந்து பாதுகாக்கவே தற்காலிகமாக வலை வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் அபகரிக்கப்படவில்லை எனவும் உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா தெரிவித்துள்ளார்.
வவுனியா, பண்டாரிக்குளம் – வேப்பங்குளம் வீதியில் வாய்க்கால் அருகில் மரங்கள் நடப்பட்டு வலையால் வேலி இடப்பட்டு நிலம் அபகரிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்ததாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விள்ளகமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் எனது வீட்டு வளவில் பயன்தரு மரங்கள், மூலிகை மரங்கள் பலவற்றை நட்டு பராமரித்து வருகின்றேன். அது போல் அழிவடையும் நிலையில் உள்ள நிழல் தரு மரங்கள் மற்றும் சில மூலிகை மரங்களையும் எனது வீட்டின் முன் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் பல மாதங்களாக நட்டு பராமரித்து வருகின்றேன். வீதியால் செல்பவர்களும் அதில் பயன்பெற்றுள்ளனர். தற்போதும் புதிதாக சில மரங்களை நட்டுள்ளேன். குறித்த மரங்களை கட்டாக்காலி மாடுகள் தினமும் சேதப்படுத்துவதால் அவை வளரவில்லை.
எனவே, குறித்த மரங்களை பாதுகாப்பதற்காகவே தற்காலிகமாக அந்த மரங்கள் உள்ள வாய்க்கால் பகுதியில் எனது மதிலுக்கு வெளியே வலையால் தற்காலிக வேலி அமைத்துள்ளேன். இது நீர் வழிந்து ஓடுவதற்கு எவ்வகையிலும் தடையாக இல்லை. இந்த மரங்கள் வளர்ந்ததும் வலைகளை அகற்றி விடுவேன். இதில் நிலம் அபகரிக்கும் எண்ணம் எண்ணிடம் இல்லை எனத் தெரிவித்தார்.
\முதலாம் இணைப்பு…….https://thinakaran.com/2025/02/18/125276/



