வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப் பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும். இதைப்போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோய்தடுப்பு பராமரிப்பு சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14.02.2025) இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட பாலம் நிறுவனத்தின் நிதி உதவியில் வன்னி ஹோப் நிறுவனம் ஊடாக இந்த மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நடுகை செய்த பின்னர் ஆளுநர் தனது உரையில், சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர்.
அவ்வாறானதொரு நிலைமையில் இவ்வாறானதொரு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே. புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.




