விளையாட்டு மைதானம் இல்லாத போதும் இவ்வருடத்திற்கான விளையாட்டுப் போட்டியை வவுனியா தெற்கு கல்வி வலய பாடசாலைகளில் ஒன்றான வவுனியா விபுலானந்தா கல்லூரி ஆரம்பித்துள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அதற்கான ஒரு நிரந்தர மைதானம் இதுவரை இல்லை என்பது கவலைக்குரிய விடயம் என கூறப்படுகிறது.
மைதானத்திற்கான நிலம் ஒன்றினை கொள்வனவு செய்ய நீண்ட நாட்களாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை அது கைகூடவில்லை.
இவ்வாறான நிலையில், கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஒன்றான விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குறித்த பாடசாலை இவ்வாண்டுக்கான இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டியை இன்று (12.02.2025) நடத்தியது.
குறித்த மரதன் ஒட்ட நிகழ்வினை பாடசாலையின் முதல்வர் ஞானமதி மோகனதாஸ் ஆரம்பித்து வைத்தார்.
மேலும், பாடசாலை முன்றலில் ஆரம்பித்த மரதன் ஒட்டம் வைரவபுளியங்குளத்தை அடைந்து, அங்கிருந்து வவுனியா நகர மணிக்கூட்டு கோபுர சந்தியை சென்றடைந்து, யாழ் வீதியூடாக சென்று பண்டார வன்னியன் சதுக்கத்தையடைந்து, அங்கிருந்து மன்னார் வீதியூடாக நெளுக்குளம் சந்தியை அடைந்து, மீள வேப்பங்குளம் ஊடாக பாடசாலை முன்றலில் நிறைவடைந்தது.
இதில் ஆண், பெண் என 58மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றியிருந்தனர்.
அத்தோடு பல பாடசாலைகளில் மைதான வசதி இருந்தும் இவ்வருடத்திற்கான விளையாட்டு நிகழ்வுகளை இன்னும் ஆரம்பிக்காத நிலையில் மைதானம் இல்லாத விபுலானந்தா கல்லூரி வவுனியா தெற்கு வலயத்தில் விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஒட்டத்தை நிறைவு செய்துள்ளமை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பெண்கள்
லதுர்சி செல்வகுமார்
வர்ணஜா தற்சணாமூர்த்தி
செந்தீபி குணசேகரம்
ஆண்
கனகராஜன் கவிஷன்
ராசகுமார் ஸ்ரீராம்
பிரகாஷ் டில்ஷான்








