தாய்நாட்டை நேசிப்பதும் அதன்மீது பற்று வைப்பதும் ஒவ்வொரு தனி மனிதனதும் தார்மிகக் கடமையாகும் என்று ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது,
எமது தாயகத்தின் 77 ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்
இன, மத, குல, சாதி, வர்க்க பேதங்களின்றி எமது தாயக பூமியான இலங்கைத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த, அர்ப்பணித்த அத்தனை தலைவர்களையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
தாய்நாட்டை நேசிப்பதும் அதன்மீது பற்று வைப்பதும் ஒவ்வொரு தனி மனிதனதும் தார்மிகக் கடமையாகும். மேலும் அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்வதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் தேசத்தின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும்.
கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் – ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
எமது நாட்டின் அண்மைக்கால அரசியல், பொருளாதார நெருக்கடிகள் எம்மனைவரது வாழ்வியலையும் வெகுவாகப் பாதித்துள்ள இக்கட்டான இந்நிலையில் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் வெகு சீக்கிரம் சீராக வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
மேலும் அமைதியும் சமாதானமும் கோலோச்சுகின்ற முன்மாதிரிமிக்க சுத்தமான இலங்கை நாடொன்றைக் நாம் கட்டியேழுப்புவதுடன் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் அவரவர் உரிமைகளைப் பெற்று, சமாதானத்துடனும் சுபிட்சத்துடனும் வாழ வேண்டி எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.