மனிதன் தோன்றி வளர்ந்த காலம் முதலே குற்றம் என்பது தோன்றி விட்டது. அதாவது குற்றம் என்பது ஒரு செயலாகவும் இருக்கலாம். அல்லது செயலை செய்ய தவறியதாகவும் இருக்கலாம். மேற்படி இரண்டும் பொதுச்சட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். இதனை நேரடியாக செய்வதும் செய்யத் தூண்டுவதும் குற்றம் எனப்படும். குற்றம் என்பத விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம்.
பொதுவாக தற்கால சமூகத்தில் குற்றம் என ஏற்றுக்கொள்ளப்பட்டதும் விதிகளையோ அல்லது சட்டங்களையோ மீறி செய்யப்படுகின்றதுமான செயல்களை குற்றம் என அடையாளப்படுத்த முடியும். குற்றம் என்ற சொல் சட்டத்தில் தனி பொருள் உடையது. சட்டத்தால் விலக்கப்பட்ட செயல் சட்டப்படி தண்டனைக்குரிய செயல்களே குற்றங்கள் ஆகின்றன. எந்த நடத்தை சமூக வாழ்க்கைக்கு விரோதமான நடத்தையோ அதனை தண்டிக்க அரசாங்கத்தால் விதி விலக்குகள் செய்யப்படுகின்றன. அதாவது சட்டத்தால் தண்டிக்கப்படும் நடத்தையை குற்றம் எனலாம்.
மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் சரியானது பிழையானது என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. அவ்வாறான பிரிவுகளில் பிழையானது எனக் கருதப்படும் விடயங்கள் குற்றமாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு குற்றம் செய்தவர்கள் பல
வேளைகளில் சமூகத்தாலும் சில வேளைகளில் சட்டத்தாலும் தண்டிக்கப்படுகின்றார்கள். இன்னும் தெளிவாகக் கூறுவோமாயின் சமூகத்தால் சில விடயங்கள் குற்றமாகவும் பிழையானதாகும். கருதப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே சட்டத்தால் குற்றமானதாகக் கருதப்படுவதில்லை மேலும் சட்டத்தால் குற்றமாகக் கருதப்படும் விடயங்கள் சமூகத்திலும் குற்றமாகப் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக: தற்போது ‘மதம் மாறுதல்’ என்ற விடயம் சமூகத்தால்
குற்றமான ஒரு செயலாகப் பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் அது சட்டத்தால் குற்றமான ஒரு செயலாகப் பார்க்கப்படவில்லை .கொலை செய்தல்’ என்ற விடயம்
சட்டத்தால் குற்றமாகப் பார்க்கப்படும் அதேயளவு சமூகத்தாலும் குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. குற்றம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலானது இற்றை வரைக்கும் சரியான வரைவிலக்கணம் இல்லாவிட்டாலும் அதனை ஓரளவுக்கு விவரிக்கலாம்.சமூகமானது பல விடயங்களைக் குற்றமாகக் கருதுகின்றது. அவ்வாறான விடயங்கள் சமூகத்துக்குச் சமூகம்
மாறுவதும் உண்டு. உதாரணமாக மேலைத்தேய சமூகங்களில் குற்றமற்றதாகப் பார்க்கப்படும் விடயங்கள் கீழைத்தேய சமூகங்களில் குற்றமாகப் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக ‘ஆபாசமாக உடை’ அணிவதைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு சமூகத்தால் பார்க்கப்படும் பல விடயங்களில் சில ஏற்றுக்கொள்ளவே முடியாத விடயங்களைப் பிரித்தறிந்து அவற்றில் குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான பாதகங்களைத் தேடும் விடயங்கள் மற்றும் தனிமனிதன், சமூகங்கள் அரசுக்குப் பாதகங்களை ஏற்படுத்தும் விடயங்கள் என்பவற்றை சட்டமானது
குற்றம் எனக் கூறுகின்றது.ஆகவே குற்றம் என்றால் என்ன என்ற கேள்விக்கு எளிய முறையில் சட்டத்தால் தடுக்கப்பட்ட ஒரு செயலைச் செய்வது என்று கூறிவிடலாம். குற்றம் எனக் கண்டுபிடிப்பதற்கான முக்கிய அம்சங்கள் என்னவென்றால் குற்றச் செயல் மற்றும் குற்ற மனம் இரண்டுமே ஒரு செயலில் இருக்கும்போது அது குற்றமாகக் கருதப்படுகின்றது.இந்திய தண்டனைச் சட்டக்கோவையானது குற்ற மனம் இல்லாமல் செய்யப்படும் குற்றச் செயல் குற்றமாகாது எனத் தெளிவாகக் கூறுகின்றது.இங்கு குற்ற மனம் என்பது ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்குத் தன் மனதால் தானே முடிவு எடுத்துக்கொண்டு அக்குற்றச் செயலைச் செய்ய எண்ணுதல் ‘குற்ற மனம்’ எனலாம். ‘குற்றச் செயல்’ எனப்படுவது தன் குற்ற மனத்தால் எண்ணிய அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வாகும். அதாவது தடுக்கப்பட்ட செயலைச் செய்தல் எனலாம். இதற்குப் புறநடையாகச்‘செய்யாமை’ கூட குற்றச் செயலாகக் கொள்ளப்படுகின்றது. அதாவது சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமை. உதாரணமாக ரயில் கடவை மூடும் தொழிலைச்
செய்பவர் ரயில் வரும் வேளையில் கடவையை மூடாததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பில் கடவை மூடும் தொழிலைச் செய்பவர் குற்றவாளியாகின்றார். ஆகவேதான் தனக்குத் தரப்பட்டிருக்கும் பொறுப்பைச் சரியாகச் செய்யாமை கூட குற்றம் என நிரூபிக்கப்படலாம்.இருந்தபோதிலும் அதைக் கட்டுப்படுத்த முடியாத செயலாக இருப்பின் உதாரணமாக நடைபெறும் ஒரு செயல் அதிக பலத்துடன் நடைபெறும் ஒரு செயல் மேலும் கட்டுப்பாட்டுக்கு அப்பால் நடக்கும் ஒரு செயலுக்கு இது பொருந்தாது. ஆகவேதான், குற்றங்கள் நடைபெறாமல் இருக்கப்பட வேண்டுமெனில் குற்ற மனங்கள் உருவாக்கப்படக்கூடாது. அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என்பது அத்தியாவசியமானதாகும்.
சமூகத்தில் குற்றம் ஒன்றிக்கு பல காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அவையாவன. உள்ளச் சிதைவு – அதாவது காதல் தோல்வி,பண இழப்பு, வாழ்க்கையில் தோல்வி என்பன ஏற்படும் போதும், இலட்சியம் ஈடேறாத போதும் உள்ளச் சிதைவு
ஏற்படுகின்றது. இதன் பின்னர் அவர்கள் தங்கள் செயற்பாடுகள், நடத்தைகள் குற்றத்தன்மை உடையவை என்பதை உணர மறுக்கின்றனர். அதை தவறு என்பதை புரிய வைப்பதற்கும் உணரவைப்பதற்கும் மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. மற்றும் எல்லாரும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறவினர்கள் மற்றும் சூழலில்
வசிப்பவர்களின் அக்கறையும் தேவைப்படுகின்றது. இவை அவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில் குற்றம் புரியும் மனநிலை அவர்களுக்கு அதிகமாக ஏற்படும். உள்ளச் சிதைவு சரி செய்யப்படாத காரணத்தால் குற்றம் புரிதலுக்கு சூழ்நிலையும் குற்றவாளியின் மன எண்ணமும் ஏற்பட்டு குற்றம் ஏற்படுவதற்கு காரணியாக அமைகின்றது
சமூக அக்கறை இன்மை – அதாவது குற்றம்அதிகரித்ததற்கும் குற்றம் ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. யாருக்கும் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் நமக்கு விதமான பிரச்சினை இல்லை என்ற மனப்போக்கு காரணமாக குற்றம் ஒன்று ஏற்பட்டால் சமூகத்தினர் முழு மையான அக்கறை செலுத்துவதில்லை. இச்செயற்பாடு குற்றவாளிகளுக்கு பெரும் பெற குற்றங்கள் செய்ய தூண்டுதலாக அமைகின்றது.
மக்கள் தொகை பெருக்கம்- அதாவது அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக வறுமை, பற்றாக்குறை ஆகியன ஏற்படும்போது பசி பட்டினிகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள தவறான குற்ற செயல்களில் ஈடுபட காரணமாக அமைகின்றது. சமூக அடக்குமுறைகள் – அதாவது சமூகத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற அடக்குமுறைகள் காரணமாக மனிதனை சட்டத்தை மீறி பாரதூரமான வன்முறையான குற்றச் செயல்கள் ஈடுபட காரணமாக அமைகின்றது.
குற்ற ஈடுபாடு – அதாவது மேற்கொண்ட நபர் அதற்கான தண்டனைகள் சிறிதளவாக இருந்தால் மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபட தூண்டும்.மேற்கூறிய காரணிகள்குற்றம் ஏற்பட செல்வாக்கு செலுத்தும். போதை பொருள் பாவனை- அதாவது சமூகத்தில் இடம் பெறுகின்ற தர குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களான கஞ்சா மற்றும் ஹெரோயின் ஆகியவை தூண்டுதலாக அமைகின்றன எனலாம். பெரும்பாலும் பாலியல் குற்றங்கள், மற்றும் கொள்ளை மற்றும் கொலை தொடர்பான குற்றங்களுக்கு தூண்டுதலாக அமையும். சமூகத்தில் குற்றங்கள் ஆனவை சமூக சீரான தன்மையை இல்லாமல் செய்ய முனைகின்றன எனக் கூறலாம். அதாவது நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதனால் சமூகமானது வன்முறை மிக்க ஒரு சமூகமாக மாற்றம் அடைகின்றது. தற்காலத்தில் அதிகமாக குற்றங்கள் போதைப்பொருள் பாவணையால் ஏற்படுகின்றது என சிலர் கூறுகின்றனர். குற்றம் ஏற்பட பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவதை எம்மால் அறிய முடியும். சமூகத்தில் குற்றங்கள் பல
தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அதாவது வன்முறை சம்பவங்கள் அதிகரித்தல் சமூக சீர்கேடுகள் அதிகரித்தல்,ஒழுக்கமற்ற சமூகம் ஒன்று உருவாதல், புத்திஜீவிகள் வர்க்கம் உருவாகுவது குறைவடைதல்,குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், சமூகம் பிற்படுத்தப்பட்ட சமூகமாக மாறுதல், ஆகிய அம்சங்கள் சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக சமூகத்தில் அதிகளவாக குற்றங்கள் ஏற்படுகின்ற போது எதிர்கால சந்நதியினுடைய
நிலை கேள்விக்குறியாகின்றது. எனினும் இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளை போன்ற சமூக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடியும். எனினும் சமூக குற்றங்கள் சமூகத்தை பின்னடைவை நோக்கி கொண்டு செல்லும். குற்றச் செயலின் தாக்கம் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்துபவையாக காணப்படுகின்றது எனலாம். நாளுக்கு நாள் சமூகத்தில் குற்றவியல் சம்பவங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
ஏற்படும் குற்றவியல் சம்பவங்கள் சிறுகுற்றங்களாகவும் பெருங்குற்றங்களாகவும் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலும் பாலியல் ரீதியிலான குற்றங்கள், கொலை மற்றும் கொள்ளை தொடர்பான குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றங்கள், சமூக வலைத்தளம் தொடர்பான குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள் ஆகியன அதிகமாக இடம்பெறுகின்றன என கூற முடியும். அண்மை காலத்தில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் மற்றும் கொள்ளை சம்பவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம். எனினும் குற்றங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. குற்றங்கள் தொடர்பாக தண்டனை சட்ட கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகள் வழங்கப்பட்டாலும் இடம் பெற்ற வண்ணமே உள்ளன.அண்மையில் இடம் பெற்ற பொலன்னறுவை வாகன விபத்து போக்குவரத்து குற்றம் என கூறலாம். ஏனெனில் வேகமாக வாகனத்தை செலுத்தியமை. கம்பளை பகுதியில் இடம் பெற்ற யுவதி ஒருவரின் கொலை மற்றும் சமூக வலைதளங்களில் இடம்பெறுகின்ற பாலியல் ரீதியான குற்றங்கள் ஆகியவற்றை எம்மால் கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது.
மச்சவாச்சி -வணமல்கொல்லாவ பிரதேசத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தேர்தல் ஒருவர் கைது செய்யப்பட்டமையை கூறலாம். போதை பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகமாக இடம்பெறுவதை
கூறமுடியும்.போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை மரண
தண்டனை ஆக்கப்பட்டாலும் அதனால் ஏற்படுகின்ற குற்றங்கள் குறைந்த வண்ணம் அவதானிக்க முடியவில்லை மாறாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. சமூகத்தில் குற்றச் செயல்கள் இடம்பெற்றாலும் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தண்டனைகள் மூலம் கட்டுப்படுத்தபடுகின்றன என கூறலாம். குற்றம் ஒன்றை செய்வதற்கு குற்ற மனம் குற்ற செயல் இரண்டும் மிக அவசியமாகும். குற்றம் என அடையாளப்படுத்தப்படுவதற்கு இரண்டும் அவசியமாகும். சமூகத்தில் குற்ற மனதுடனும் குற்ற செயல் ஆகியவற்றுடன் குற்றங்கள் இடம் பெறுகின்றன. மேற்கூறிய சான்றுகளை
எடுத்துக்காட்டாக கூற முடியும்.
சமூகத்தில் இடம் பெறும் பாரதூரமான குற்றங்கள் பெரும்பாலும் சிறிய குடும்ப பிரச்சனைகளில் இருந்து கொலை போன்ற பாரதூர குற்றங்களாக மாறுவதை அவதானிக்க முடியும். உதாரணமாக குடும்ப சொத்து பிரச்சனை, எல்லை பிரச்சினை,
வாய் தர்க்கம் ஆகியவற்றை கூறலாம்.
தொகுத்துக் கூறின் சமூகத்தில் இடம் இடம்பெறும் குற்றங்கள் தூரமாக அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஆரம்பத்தில் சிறு குற்றங்களாக இருப்பவற்றை தவிப்பதன் மூலம் பார தூரமான குற்றச் செயல்களில் இருந்து சமூகத்தை விடுவித்துக் கொள்ளலாம். ஒரு சமூகம் ஒன்றின் புதிய வளர்ச்சிக்கு குற்றம் தடையாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது. சமூகத்தில் குற்றத்தின் தாக்கம் வேரூன்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது எனலாம்.
கட்டுரை By- சங்குவேலியூர் ஜெயராசா கபில்ராஜ்