மூத்த அரசியல் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு, இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கைத் தமிழர்களின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
இவர் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். தமிழக மக்கள் மீது பெரும் அன்பு கொண்டவர்.
இலங்கைத் தமிழ் மக்கள் நல்வாழ்வுக்காக, நமது மத்திய அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் தொடர்பாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
ஐயா மாவை சேனாதிராஜாவின் மறைவு, இலங்கைத் தமிழ் மக்களுக்கும், தனிப்பட்ட முறையில், எனக்கும் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றேன். ஓம் சாந்தி!” – என்றுள்ளது.