முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் போட்டியானது இன்றையதினம் (01.02.2025) காலை மாமூலை சுதன் சுதனா விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.
விருந்தினர்கள் , அணி வீரர்கள் அழைத்து வரப்பட்டு மங்களவிளக்கேற்றல், கொடியேற்றலை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தது.
இன்றையதினம் இடம்பெற்ற இரு போட்டிகளில் ஆரம்ப போட்டியாக முல்லைவொறியர்ஸ் அணி, முல்லை அக்னி அணி போட்டியிட்டிருந்தன. முல்லை அக்னி அணியினர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்திருந்தனர். முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய முல்லை வொறியர்ஸ் அணியினர் 18.4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்றிருந்தனர் . பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய முல்லை அக்னி அணியினர் 11.1 பந்து பரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகனாக முல்லை அக்னி அணியினை சேர்ந்த ரி.தயானன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இரண்டாவது போட்டியாக குருந்தூர் , முல்லை டைமண்ட் அணி போட்டியிட்டிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருந்தூர் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 18.4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்றிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய முல்லை டைமண்ட் அணியினர் 14.5 பந்து பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 111 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தனர். ஆட்ட நாயகனாக முல்லை டைமண்ட் அணியினை சேர்ந்த ரி.உதயநேசன் தெரிவு செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் போட்டி குழு தலைவர் எஸ்.ராஜகோபால் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன், சிறப்பு விருந்தினர்களாக முள்ளியவளை பொலிஸ் பொறுப்பதிகாரி அமரதுங்க, தண்ணீரூற்று மேற்கு கிராம அலுவலர் பகீரதன், கௌரவ விருந்தினர்களாக எம்.ஐ.றஜாப், ஏ.ஜே.டினேஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளர் வி.பிரதீபன், துடுப்பாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், அணியின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், அணி வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.