காதலனுக்காக பெற்றோரை ஏமாற்றி, வீட்டில் இருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை களவாடி காதலனிடம் யுவதி கைது – களனி பகுதியில் சம்பவம்
தமது காதலனுடன் இணைந்து, பெற்றோரை ஏமாற்றி அவர்களுக்கு சொந்தமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் களனி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இணைய சூதாட்டத்துக்கு அடிமையானவர் எனவும் அவர் குறித்த சூதாட்டத்தில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த யுவதி மாத்திரமே அவரது வீட்டில் இருந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து சந்தேகம் கொண்ட காவல்துறையினர் குறித்த யுவதியிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர் அதன்போது, அவர் தமது காதலனுடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்துக்கான திட்டத்தை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்பின்னர் அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த திருட்டு சம்பவத்துக்கான திட்ட வரைபடமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சந்தேகநபரான யுவதி இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.