பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப் பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று (27.01) இடம்பெற்றது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் மத்தியஸ்தர் சபை உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நீதி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப் பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்பு செயற்திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வும் அது தொடர்பான செயற்பாடுகள் தொடர்பிலும் பயிற்சி அரங்கு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மயூரதன், பவ்மியா, செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பிருந்தா ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வைத்தனர். இப் பயிற்சி செயற்திட்டம் மூன்று தினங்களுக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.