வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகமொன்று இன்று (26.01.2025) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு நகருக்கு அருகாமையில், புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகமே அவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பின் மூத்த கல்விமான்களில் ஒருவரான ஓய்வுநிலை அதிபர் சிவசாமி செல்வநாயகம் அவர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு குறித்த மக்கள் தொடர்பகம் திறக்கும் நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் மக்கள் தொடர்பகம் திறந்து வைக்கப்பட்டதுடன், உத்தியோக பூர்வமாக அலுவலகச் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தொடர்ந்து கலந்துரயாடல்களும், மக்கள் குறைகேள் சந்திப்புக்களும் இடம்பெற்றன.
இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்பகமானது வாரநாட்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்க்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அண்மையில் பெய்த கனமழை காரணமாக வன்னிப்பகுதியெங்குமுள்ள வயல்நிலங்கள் பாரியளவில் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பலத்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இந்நிலையில் புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள விவசாயிகளும் வெள்ள அனர்த்தம் காரணமாக பலத்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குறிப்பாக வள்ளிபுனம், தேவிபுரம், உடயார்கட்டு, மன்னாகண்டல், கள்ளியடி உள்ளிட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள பல்வேறு வயல்நிலங்களும் அழிவடைந்துள்ளன.
அவ்வாறு அழிவடைந்த வயல் நிலங்களுக்குரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். எனவே எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் என்றார்.