வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இந்தியா என்கின்ற சகோதரனின் கதவை எந் நேரமும் தமிழ் மக்கள் தட்டலாம் என யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதர் சாய் முரளி தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா இராஜதந்திர உறவைத் தாண்டி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் பயணித்து வரும் சகோதரனாக மக்களின் தேவைகளை அறிந்து உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
யாழ். துணைத்தூதரகம் வடக்கு மக்களின் நல்ல நண்பனாகவும் சகோதரனாக செயற்பட்டுவரும் நிலையில் யார் நண்பன் யார் பகைவன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்களுடன் சேர்ந்து எடுத்த தீர்மானங்கள் சில வேளைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் நலன்களில் என்றும் ஆதரவாளனாக யாழ்ப்பாணம் தூதரகம் சொயற்படும்.
இந்தியா மக்கள் யாழ்ப்பாண மக்களின் அறிவாற்றலை அன்றும் இன்றும் பொருமை கொள்பவர்கள் என்பதை கூறிக் கொள்வதில் பொருமையடைவதோடு இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நன்கு உணரும்.
ஆகவே வடக்கு மக்களின் பாதுகாவலனாகவும் சிறந்த நண்பனாகவும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் என்றும் செயற்படும் எனக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான றஜீவன், பவானந்தராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.