சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தும் நோக்குடனான கலந்துரையாடல்
சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை அணிதிரட்டுதல் என்ற பிரதான நோக்குடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றையதினம் (24.01.2024) காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்முகமாக அரசாங்க உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில் பல்கலைக்கழக மணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வானது உண்மைத்தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும் எனவும், மாணவர்கள் ஆய்வினை மேற்கொள்ளும் போது உண்மையான தரவுகளை திரட்டி யதார்த்தபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில் பல்கலைக்கழக மாணவர்களால் – விசேட தேவைப்பாடுகள் உடையோருக்கான பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு, மீளக்குடியமர்ந்தவர்களின் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு மற்றும் அழிந்துவரும் பாரம்பரிய கலையான கூத்து தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இக் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணா, சிரேஷ்ட விரிவுரையாளர் ஸ்ரீகாந்தராஜா சிவகாந்தன், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் திரு. ந. தயாபரன், தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டின் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. உமாநாத், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. இ. கிருஸ்ணகுமார், தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர்கள் மற்றும் யாழ் பல்கழைக்கழக மாணர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.
