வவுனியா மாவட்ட சமாதானப் பேரவையின் பொங்கல் விழா மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி வளாகத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன்போது, முன்பள்ளி மாணவர்களினால் தமிழர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல கலை நிகழ்வுகளும், நடனங்களும் நடைபெற்றன.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சர்வ மதப் பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பொங்கல் நிகழ்வில் கத்தோலிக்க, இந்து, பௌத்தம், இஸ்லாம் மதத் தலைவர்கள் கலந்துகொண்டதுடன், தமிழ், சிங்கள, கிறிஸ்தவ, இஸ்லாமிய முன்பள்ளி மாணவர்களால் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களும் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மதத் தலைவர்கள், வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் அங்கத்தவர்கள், எப்.ஐ.ஆர்.எம். நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.