வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று இடம்பெற்றது.
பருத்தித்துறையில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் கண்ணாடி கழற்றப்பட்டே கொள்ளை சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பகுதியின் ஐந்நூறு மீற்றர் சுற்றுவட்டத்திலேயே பருத்தித்துறை பொலிஸ் நிலையம், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் என்பன அமைந்துள்ள நிலையில் துணிகர கொள்ளை இடம்பெற்றுள்ளது.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் பேருந்து உரிமையாளரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.