அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையின் 75 ஆவது வருட நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி பவளவிழா மாநாடும் புத்தக வெளியீடும் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (20.01.2025) ஊடக சந்திப்பை முன்னெடுத்த குறித்த ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் கூறுகையில்,
1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையானது பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு பல சமூக பணிகளை குறிப்பாக வறிய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவித்து வந்துள்ளது. இதனால் பலன் பெற்ற பல நூறு பேர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த மகாசபையானது 75 ஆவது வருட நிறைவை எட்டியுள்ளது.
அதனடிப்படையில் வள்ளுவரின் வரலாற்றை வாழும் சந்ததியூடாக வரும் சந்ததிக்கு கடத்திச் செல்வதற்காக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், உயர் பதவி நிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்ப்பானத்தின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்திய அரசின் நிதியுதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையம் இந்திய அரசின் வள்ளுவர் புகழை உலகெங்கும் பரப்பும் முயற்சியின் கீழ் திருவள்ளுவர் கலாசார நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் குடியரசு தினமான 26 ஆம் திகதி குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளமை பலரதும் பார்வையை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.