வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைச் சாரலின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 – 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.