நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,045 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் கடந்த வருடம் மாத்திரம் 49 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 24 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 25 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டவர்களாவார். அவ்வயதுக்கு இடைப்பட்ட சுமார் 11 பேர் மரணித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் 1 தொடக்கம் 4 வயதுக்கு இடைப்பட்ட இரு சிறுமிகள் உள்ளடங்களாக 20 பெண்களும் 4 ஆண்களும் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் நாடு தழுவிய ரீதியில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இம்மாதத்தின் முதல் வார நிறைவில் சுமார் 1138 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த வகையில் நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பைக் காண முடிகிறது. கடந்த சில மாதங்களாக நிலவிவந்த சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இவ்வாறு டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளது.
அத்தோடு எதிர்வரும் சில நாட்களிலும் நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
டெங்கு பரவலை கருத்தில் கொண்டு 4 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம்மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, காலி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.
முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலை கட்டுக்குள்க் கொண்டு வர முடியும். இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்பட வேண்டும். ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.