ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால், தற்கொலை செய்து கொள்ளுமாறு வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும் கூட இடையில் சில காலம் பெரியளவில் எந்தவொரு தாக்குதலும் இல்லாமலேயே இருந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லை தாண்டி தாக்கும் தங்களின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று மேற்குலக நாடுகள் அனுமதி கொடுத்த உடனேயே நிலைமை மொத்தமாக மாறியது. உக்ரைன் ஒரு பக்கம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் சூழலில், ரஷ்யாவும் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது.
சுமார் 10,000 வட கொரிய வீரர்கள் குர்ஸ்கிலில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், முறையான போர்ப் பயிற்சி இல்லாததால் வடகொரிய வீரர்கள் அதிகம் திணறி வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போராடும் வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ரஷ்யாவுக்காகச் சண்டை போடும் வட கொரிய வீரர்களை உக்ரைன் சுற்றி வளைத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கிம் அரசு உத்தரவிட்டுள்ளதாம். உக்ரைன் வீரர்களிடம் உயிருடன் சிக்கினால் தேவையில்லாத பிரச்சினை என்பதாலேயே வடகொரிய அரசு இப்படியொரு உத்தரவைப் போட்டுள்ளதாம். தென்கொரியாவின் உளவு அமைப்பு சார்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உளவு அமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டிய தென்கொரிய எம்பி லீ சியோங்-குவ்ன், “போரில் உயிரிழந்து கிடந்த வீரர்களை உக்ரைன் ஆய்வு செய்துள்ளது. அதில் வடகொரிய வீரர்களிடம் இதுபோல குறிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது தற்கொலைப் படையைப் போல வெடிகுண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது” என்றார்.
என்ன தான் வடகொரிய அரசு இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்து இருந்தாலும் கூட ஏகப்பட்ட வீரர்களை உக்ரைன் உயிருடன் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா வசம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவித்தால் வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸி அறிவித்துள்ளார்.