பருத்தித்துறை நகர சபையின் புதியசந்தைக் கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொடி ஏற்றப்பட்டு சந்தை கட்டிட தொகுதியின் புதிய கட்டிடம் ஆளுநரால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரை நீக்கம் செய்யப்பட்டு கட்டிடம் பார்வையிடப்பட்டது.
தைத் திருநாளில் முதற்கிழமையில் குறித்த மரக்கறி சந்தை வியாபாரிகளுக்காக கையளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய ஆளுநர், மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு நிர்வாகம் தற்போது clean srilankan எனும் தொனிப் பொருளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரச சேவைகளைப் பெறுகின்ற போது தெரிந்த ஒருவரைக் கூட்டிச் செல்ல வேண்டிய சூழல் கடந்த காலங்களில் காணப்பட்டது. 2025 ஆம் ஆண்டு மக்கள் தமது சேவைகளை தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ளும் வகையிலான ஆண்டாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுமையடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வர வேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
தற்போது எமக்குள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலர் ஆகியோர் இளையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் உத்வேகத்துடனும் துடிப்புடனும் செயலாற்றுகின்றனர். இந்தப் பொதுச் சந்தைக்குரிய காணியை கொள்வனவு செய்து கட்டடம் அமைத்து இன்று மக்களுக்கு கையளிக்கின்ற சபையின் செயலரையும் பணியாளர்களையும் பாராட்டுகின்றேன். இதேபோன்று திறம்பட பணியாற்றுவதுடன் எதிர்காலத்தில் இந்தப் பொதுச் சந்தையை பராமரிப்பதிலும்தான் இதன் வெற்றி தங்கியிருக்கின்றது, என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், ஒதுக்கப்படும் நிதியை உரிய காலத்தில் செலவு செய்து முடிப்பதென்பது எமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. ஆனால் இந்தக் கட்டடத்தை மிக நேர்த்தியாக உரிய காலத்தில் நிறைவேற்றிய ஒப்பந்தகாரருக்கு நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், பருத்தித்துறை பிரதேச செயலர், நகர சபையின் தலைவர், செயலாளர், வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.