கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 01.00 மணிக்கு நடைபெற்றது.
இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு அறிமுகத்துடன் – தேசிய நிகழ்ச்சித் திட்டமானது டியிற்றல் மயப்படுத்தல், வறுமை ஒழித்தல் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா என வகைப்படுத்தப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், “செழுமையான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கமைய, அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பொது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் வினைத்திறனாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் நோக்கம் மற்றும் மாற்றங்களை உருவாக்குதல் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும், சிரேஷ்ட உதவிச் செயலாளர் தெரிவிக்கையில், தனிமனித மனப்பாங்கிலிருந்து மாற்றம் வரவேண்டும் எனவும், அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், சிறிய சிறிய மாற்றங்கள் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியதுடன், ஏனைய உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுகளை சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் எதிர்வரும் 22.01.2025 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தி முடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கிளைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.