புத்தளம், தங்கொட்டுவ, செரெப்புவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (06) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், வைக்கால் மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 20 முதல் 53 வயதுக்குட்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கொட்டுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 123 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.