யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச, தனியார் வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் ஆதனங்களுக்கான வருடாந்தம் செலுத்த வேண்டிய நிலுவை ஆதன வரியை (சோலை வரி) வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபை – கரவெட்டிக்கு செலுத்தாத காரணத்தினால் குறித்த ஆதன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதன வரியை செலுத்தாதவர்களுக்கு எதிராக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 158 ஆவது பிரிவுக்கு அமைவாக வரும் ஜனவரி மாதம் 6 – 7 – 8 ஆம் திகதிகளில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், குறிப்பிட்ட ஆதனங்களில் உள்ள பொருள்கள் பிரதேச சபையால் கையகப்படுத்தப்பட்டு ஏலமிடப்படும் எனவும், குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கி பல மாதங்கள் ஆகியும் குறிப்பிட்ட ஆதன உரிமையாளர்கள் சோலை வரியை கட்டுவதில் அசிரத்தையாக உள்ளார்கள் என கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்ஸனாதன் அவர்களால் 27.12.2024 அன்று பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லியடி நகரில் சில வருடங்களாக ஆதன வரி நிலுவையை செலுத்தாத 51 வணிக வீடு, நிறுவனங்கள் (அதிகமானவை பிரபல வணிக நிறுவனங்கள்) முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நேற்று 30.12.2024 திங்கட்கிழமை வரை 23 பேர் ஆதன வரியை செலுத்தி சட்ட நடவடிக்கையில் இருந்து தங்களை விலக்கி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.