“இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது.” என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.
புதிய அரசமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும். நாட்டில் இதுவரை இயற்றப்பட்ட அரசமைப்புகளின்போது மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படவில்லை. எம்மால் கொண்டுவரப்படும் அரசமைப்பு மக்கள் அனுமதி கிடைத்ததாக இருக்க வேண்டும். அதற்குரிய பணிகளுக்காகவே மூன்று வருடங்கள் என கால எல்லை குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
கடந்த கால யோசனைகளும் உள்வாங்கப்பட்டு எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதனைச் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். சிலவேளை மூன்று வருடங்களுக்கு முன்னர்கூட அது நடக்கலாம்.” – என்றார்.