வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் சனிக்கிழமை(21) பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தலைமன்னார் பகுதியில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரால் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள் பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து அரசபடைகள் வெளியேறி மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.
மேலும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஐயப்ப சாமி பக்தர்கள் தமது யாத்திரிகைக்காக இந்திய பயணத்திற்கான விமான பயணக்கட்டணம் அதிகரித்த வண்ணம் உள்ளதையும், அதனை குறைத்து அத்துடன் கடவுச்சீட்டை பெறுவதற்காக பக்தர்கள் தமது பயணத்தின் நிமித்தம் கொழும்பு நகருக்கு பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வந்து இந்து கலாச்சார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுவதையும், அதை தளர்த்த வேண்டியும், விமானக் கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியும், தமது கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முன்வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுடனான சந்திப்பானது இன்றைய தினம் (21) சனிக்கிழமை காலை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போது பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தார்.
இதன் போது தலைமன்னாரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட பிரதிநிதிகளும், ஐயப்ப சாமி பக்தர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினருடன் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.