கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு ஹாபிட்டிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பல்லேவெல, ஹாபிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த பெண் தனது தந்தையின் சகோதரனுடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.