தம்மை வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து மாகாண ஆளுநர் நீக்கியமையை வெற்றும் வெறிதாக்குமாறு கோரி மரியதாசன் ஜெகூ, வடமாகாண மேல் நீதிமன்றின் யாழ்ப்பாணம் அமர்வில் உறுதிகேள் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.மேற்படி மனு ஆதரிக்கப்பட்டு எதிர்மனுதாரர்களான வடக்கு மாகாண ஆளுநர், மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு அறிவித்தல் சேர்ப்பிக்க கட்டளையிட்ட வடமாகாண மேல் நீதிமன்றின் யாழ்ப்பாணம் அமர்வு நீதிபதி சூசைதாசன், வழக்கை ஆட்சேபனைக்காக வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு தவணையிட்டார்.மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றிவந்த பராமரிப்புத் தொழிலாளிக்கும், எந்திரிக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து மூவர் கொண்ட ஆரம்ப விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கையின் பரிந்துரையின் பிரகாரம் இருவரையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டது. அந்த அறிக்கை மனுதாரருக்கு பாரப்படுத்தப்பட்டது.ஆனால், இந்த இடமாற்றத்துக்கு எதிராக மன்னார் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இடமாற்றம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்று மன்னார் மேல் நீதிமன்றத்தால் இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்கையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி ஆளுநரின் செயலாளர் குறித்த இடமாற்றத்தை ரத்துச் செய்து, மன்னார் அலுவலகத்துக்கு அந்த இடமாற்றத்தைச் செயற்படுத்துமாறு மனுதாரருக்குப் பணித்துள்ளார். இதையடுத்து மனுதாரர் ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நீதிமன்ற வழக்குத் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்போது, ஆளுநர் தனது செயலாளரின் பணிப்பின் பெயரில் செயற்படுமாறும் இல்லாவிடில் மனுதாரரை பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்தே இந்தப் பதவி நீக்கம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் முன்னாள் வடக்கு மாகாண செயலாளர் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ உறுதிகேள் எழுத்தாணை மனுவை வடக்கு மாகாண மேல் நீதிமன்றின் யாழ்ப்பாணம் அமர்வில் தாக்கல் செய்துள்ளார்.தனது சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வழிப்படுத்தலில் சட்டத்தரணி பெனாசி பிரதீபன் இந்த உறுதிகேள் எழுத்தாணை மனுவை மனுதாரர் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.மனுவில் தனது பதவி நீக்கல் தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்கும் இடைக்காலக் கட்டளை உள்ளிட்ட இன்னும் சில நிவாரணங்கள் கோரப்பட்ட நிலையில், இந்த வழக்கு வரும் ஜனவரில் 20ஆம் திகதி எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.