வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படிவங்களை நாம் வழங்குவதில்லை என ஆளுநர் அலுவலக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெறுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்ற பொழுது அங்கே தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதில்லை என அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரி தெரிவித்தார்.
தொடர்ந்து தகவல் உத்தியோகத்தர் உள்ளாரா? என கேட்டபொழுது நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரிடம் கதைப்பதற்கு குறித்த அதிகாரி அனுமதி வழங்கினார். குறித்த அதிகாரியிடம் படிவத்தை வினவிய பொழுது தகவல் அறியும் உரிமை சட்ட படிவம் இணையதளத்தில் உள்ளது நாம் வழங்குவதில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் அவ்வாறு வழங்ககூடாது என ஏதும் சட்டதிட்டங்கள் உள்ளதா? என வினவிய பொழுது தகவல் அறியும் உரிமை சட்டம் தகவலை பெற்றுகொள்ள வெளியில் இருந்து வருவதனால் எம்மால் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆளுநரை தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.