முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று(13) தமது கடமைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய, குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், தமது எக்ஸ் பக்கத்தில் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கையில்,
“பல ஆண்டுகளாக, நீங்கள் ஒரு நிழலைப் போல என்னுடன் நின்று, என் உயிரையும் என் குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் பாதுகாத்தீர்கள். உங்கள் தியாகங்கள், விசுவாசம் மற்றும் சேவை ஆகியவற்றை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.