நேற்று முன்தினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் நகையை திருடிய சந்தேகநபரை கைது செய்ததுடன் நகையையும் மீட்டுள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இன்னொருவரும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே குறித்த திருட்டுக்கு திட்டமிட்டு கொடுத்துள்ளார் என்பதுடன், அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு திட்டமிட்டு கொடுத்து திருட்டு இடம்பெற்ற பின்னர், முறைப்பாடு செய்வதற்காக, திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றும் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.