மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே !
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து என்னை இந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய வாக்காளர் பெரு மக்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு , நீண்ட காலம் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்திய மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களை நினைவு கூர்ந்தவனாக 10 ஆவது நாடாளுமன்றத்தில் எனது முதலாவது உரையை ஆற்ற விளைகின்றேன்.
எனது உரையில் மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பாகவும் , அண்மையில் நிலவிய காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்கள் தொடர்பாகவும் கருத்துரைக்க விரும்புகின்றேன்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே !
மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் தனது உரையில் ஊழலற்ற, இனவாதமற்ற, மதவாதமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையான ஒரு ஆட்சியை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க கூற்றாகும். இதற்கு முன்பு கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் மேற்கொண்ட ஊழல், இனவாதம், மதவாதம் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற ஆட்சி முறை ஆகியன இந்த நாடு இன்றைய இக்கட்டான சூழ்நிலையை அடைய முதன்மையான காரணி என்பது அனைவரும் அறிந்த விடயம்.
எனவே குடியரசுத் தலைவர் கூறியவாறு ஊழலற்ற, இனவாதம் அற்ற, மதவாதம் அற்ற மற்றும் வெளிப்படைத்தன்மை முதலியவற்றைக் கொண்ட ஆட்சியை சொல்லில் மட்டுமின்றி இந்த அரசு செயலிலும் காட்ட வேண்டும்.
“ சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் “
என்ற வள்ளுவர் வாக்கினை நினைவில் கொண்டவர்களாக இந்த ஆட்சியாளர்கள் செயல்படுவார்கள் என நம்புகின்றேன் . மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையில் அரச சேவையினை வினைத்திறன் உள்ளதாக ஆக்கப் போவதாகவும் சட்ட ஆட்சியை நிலைநாட்டப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையினை உலகத்தரத்திற்கு உயர்த்தினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 139 குடிமக்களுக்கு ஓர் அரச ஊழியர் இருந்தார், இன்று 13 பேருக்கு ஓர் அரசு ஊழியர் காணப்படுகின்றார் என கூறப்படுகின்றது.
எனவேதான் அரச சேவையினை ஒழுங்குபடுத்தி மீளமைக்க வேண்டும்.
அடுத்து அவர் பேசுகையில் பொதுச் சொத்துக்களை களவாடியவர்களை,மோசடி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவுள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் வந்த அரசுகளும் தேர்தல் காலங்களில் இவ்வாறு கூறின, ஆட்சிக்கு வந்த பின்பு எதுவும் நடக்கவில்லை , யாரும் தண்டிக்கப்படவும் இல்லை , ஆனால் இந்த அரசு கூறியதனை கூறியவாறு செய்யும் என நம்புகின்றேன். அத்தோடு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவது மட்டும் அன்றி அவர்கள் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தினையும் வளத்தினையும் மீளப் பெற வேண்டும்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயம்பியுள்ளார்.
வேளாண்மை துறை, கடற்தொழில் துறை மற்றும் கைத்தொழில் துறை முதலியவற்றில் இந்த நாடு நீண்ட தூரம் வளர்ச்சி காண வேண்டியுள்ளது.
இத்துறைகள் வளர்ச்சி கண்டால் மாத்திரம் போதாது அபிவிருத்தியும் அடைய வேண்டும்.
பொருளியலில் வளர்ச்சியும் , அபிவிருத்தியும் வெவ்வேறானவை .
வளர்ச்சி என்பது ஒரு மரம் செங்குத்தாக வளர்வது போன்றது. அபிவிருத்தி என்பது அந்த மரம் பல்வேறு கிளைகளை பரப்பி வளர்வது போன்றது.
அதனைப் போன்று கமத்தொழில்,கடற்தொழில்,கால்நடை வளர்ப்பு மற்றும் கைத்தொழில் துறைகளும் பல்வேறு கிளைகளை விட்டு அபிவிருத்தி காண வேண்டும், அத்தோடு மக்களிடையே வருமானப் பங்கீடும் நியாயமானதாக அமைய வேண்டும்.
ஒரு காலத்தில் பொலிவியா நாட்டில் அந்த அரசின் அயராத முயற்சியால் நாட்டின் பொருளாதாரம் 20% ஆல் உயர்ந்தது . இந்த வளர்ச்சிக்கு முன்பு பொலிவியா நாட்டில் 60 வீதமான வருமானத்தினை 40 வீதமான மக்களும் 40 வீதமான வருமானத்தினை 60 வீதமான மக்களும் வைத்திருந்தனர்.
ஆனால் வளர்ச்சிக்குப் பின்பு பார்த்தபோது 80 வீதமான வருமானத்தினை 20 வீதமான மக்களும் 20 வீதமான வருமானத்தினை 80 வீதமான மக்களும் வைத்திருந்தனர். இது ஒரு பொருளாதார அபிவிருத்தி அல்ல. எனவே தான் இந்த அரசு பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியில் மட்டுமன்றி வருமான பங்கீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகின்றேன்.
அதேபோன்று வேளாண்மை துறை,கடற்தொழில்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை ஆகியவற்றில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும். எமக்கு அயலில் உள்ள இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்பத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயத்துறை மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பணி அளப்பரியது என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதேபோன்ற பல்கலைக்கழகங்கள் இந்த நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.
அதேபோல கணனி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், ஐஐடி என்று அழைக்கப்படுகின்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் ஆற்றி வரும் பணிகளையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இங்கு கல்வி கற்றவர்கள் அந்த நாட்டிற்கு கொண்டு வருகின்ற அந்நிய நாணய மாற்றின் அளவையும் , பொருளாதார மேம்பாட்டுக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.