வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாம் வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 29.11.2024 மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் மிக நீண்ட காலமாக பயன்பாடில்லாது இருக்கும் தளத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என வணிகர் கழப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
யாழ். மாநகர சபையுடன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை முன்னெடுக்க பலர் ஆர்வமாக உள்ளபோதும் அவர்களுக்கான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான இடங்களையும், அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக வணிகர் கழக பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
அதற்குப் பொருத்தமான இடங்களை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒதுக்கினால் அவற்றை குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே கூரையில் அலுவலர்களை ஒழுங்குபடுத்தினால் இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பிரதேச செயலர் பிரிவுகளில் இடங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் அதற்கான தடைகள் இருக்காது என நம்புவதாகவும் அவற்றைச் செய்ய முடியும் எனவும் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கக் கூடிய இடங்களை அடையாளப்படுத்திய பின்னர் வருடத்தில் ஒரு தடவையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினால் அனுகூலமான பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என வணிகர் கழகப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். விரைவில் அவற்றை ஆரம்பிப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
சத்திரசந்தையை புனரமைக்குமாறும் கடந்த காலத்தில் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து செயற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனவும் யாழ் வணிகர் கழகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் கவனமெடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கில் நிலவும் மணல் பிரச்சினைக்கு தெற்கிலிருந்து இங்கு மணலைக் கொண்டு வரும் யோசனையும், கடலிலிருந்து மணலைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் வணிகர் கழகத்தினர் முன்வைத்தனர்.
அவற்றை ஆராய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார். பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய வணிகர் கழத்தினர் தீவகப் பகுதிகளின் பொருட்கள் போக்குவரத்து landing craft mechanism பயன்படுத்துவதன் அவசியத்தையும் முன்வைத்தனர்.
இவற்றுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பதிலளித்தார்.