பெண்களால் சாதரிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு பெண்களும் தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக் கொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (30.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
யுதத்தத்தல் கிளிநொச்சி மாவட்ட மக்கள் குறிப்பாக பெண்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துயரங்கள் ஏராளம். இந்த துயரங்களை சுமந்து வாழ்ந்து வந்த மக்களுக்கு ஆபத்பாண்டவராக வந்து அபயக்கரம் நீட்டியவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.
கடந்த கால நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழர் அரசியல் புலத்தில் இருக்கின்ற கட்சிகள் தேசியம் பேசி எமது மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்குகளை அபகரித்து அதிக ஆசனங்களை பெற்று தமது சுகபோகங்களை அனுபவித்தது மட்டுமல்லாது எம்மை நடுவீதிகளில் தவிக்கவிட்டு அந்த அவலத்திலும் அரசியல் செய்து வந்தனர்.
ஆனால் ஈ.பி.டி.பி கட்சி தனக்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தை கொண்டு எமது மாவட்டத்தின் அநேக தேவைகளை குறிப்பாக கணவரை இழந்த பெண்களுக்கு மற்றும் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்கள், சிறுவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொடுத்து அழிந்து கிடந்த எம் தேசத்தையும் மக்களையும் மீண்டும் எங்களால் புத்தெழுச்சியுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி ஒவ்வொருவரையும் தலைநிமிர வைத்தது. அதற்கு ஈ.பிடி.பி கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கொண்டுள்ள நிலையான கொள்கையும் அவர்கள் கொண்டுள்ள தேசிய நல்லிணக்கமுமே காரணமாக அமைந்திருந்தது.
இதேவேளை தமிழ் மக்களின் இதுவரையான போலி அரசியல் பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும். அதனால் தான் உங்கள் ஒவ்வொருவரது குடும்பங்களிலிருந்தும் எமது கட்சியின் கொள்கை மற்றும் வழிநடத்தலை ஏற்று தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்த ஒவ்வொரு பெண்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
இதேநேரம் தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுள் மக்கள் நலனையும் மக்கள் மீதான அக்கறையையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் ஒருங்கிணைத்து சிறந்த பொறிமுறையுடன் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம் முதல் இன்று வரை தனது சேவைகளை முன்னெடுத்தவரும் ஒரே கட்சியாகவும் ஈ.பி.டி.பியே இருந்து வருகின்றது.
எமது கட்சி இதுவரையான காலத்தில் முன்னெடுத்த மக்கள் நலத்திட்டங்களை சேவைகளை ஒவ்வொரு குடிமகனது செவிகளுக்கும் கொண்டு சென்று தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவு ஈ.பி.டி.பியும் அதன் சின்னம் வீணையும் என நீங்கள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்படன் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
அவ்வாறு நீங்கள் ஒவ்வொருவரும் அணிதிரண்டால் நிச்சயம் எமது பெண்களுக்கு சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து நாடாளுமன்றில் உங்களின் குரலாக நான் ஒலிப்பேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.