தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களிடையே நடாத்தி வரும் மாணாக்க உழவர் வீட்டுத்தோட்டப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவு உற்பத்தி, மாணவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போட்டியின் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஏற்கனவே வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்களும், புதிதாக ஈடுபட விரும்பும் மாணவர்களும் இந்த ஆண்டுக்குரிய மாணாக்க உழவர் போட்டியில் கலந்துகொள்ள முடியும். போட்டிக்கான விண்ணப்ப முடிவு இம்மாதம் 10ஆம் திகதி (10.10.2024) ஆகும்.
போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் யாழ்ப்பாணம், அரசடிவீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தையும், இலவசமாக விதைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.