இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான ஹிப் ஹாப் ஆதி தமிழா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கடைசி உலக போர்’ எனும் திரைப்படம் , ‘போரின் கொடுமைகளை மாறுபட்ட கதை களத்தில் நேர்த்தியாக விவரித்திருக்கிறது’ என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹிப் ஹாப் ஆதி தமிழா இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கடைசி உலக போர்’ எனும் திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி தமிழா, அனகா, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, அழகம் பெருமாள், தலைவாசல் விஜய், ஹரிஷ் உத்தமன், நடன இயக்குநர் கல்யாண், குமரவேல், இளங்கோ குமரன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தமிழா இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநரும், இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தமிழா தயாரித்திருக்கிறார்.
வெளியீட்டிற்கு முன் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதன் போது படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர். சி சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
படக்குழுவினரை வாழ்த்தி சுந்தர் சி பேசுகையில், ” ஆதியை மட்டும் தான் நான் திரையுலகில் அறிமுகப்படுத்தினேன்.
ஆனால் அவர் ஏராளமானவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு என்னிடம் வந்து வாய்ப்பு கேட்ட ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும், நடிகராகவும் , தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டு தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஊடகங்களுக்கும் , ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்கு தரும் அளவிற்கு என் மீது அவர் வைத்திருக்கும் மரியாதைக்கும், அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த குழுவினர் விடா முயற்சியால் மென்மேலும் வளர்ந்து சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
ஹிப் ஹாப் ஆதி தமிழா பேசுகையில்,
” இந்தத் திரைப்படம் ஏனைய திரைப்படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு புதுமையாக இருக்கும்.
இதற்கு மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான். அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் போர்க் கள காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறோம்.
இதற்காக கலை இயக்குநரும் , ஒளிப்பதிவாளரும் கடுமையாக உழைத்து, அற்புதமான அழகியலான காட்சி மொழியை வழங்கி இருக்கிறார்கள். ‘ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே’ எனும் சித்தரின் வாக்கு தான் இந்த படத்தின் மைய புள்ளி.
நாம் எமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டால் இந்த உலகம் அழிந்து போய்விடும் என்பதுதான் இந்த படத்தின் மூலம் சொல்ல வருகிறோம். இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.