இந்தியாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலைக்குறைவால் வியாழக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 72. கடந்த மாதம் 19 ஆம் திகதி சுவாச தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சீதாராம் யெச்சூரியின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்த சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களில் தனது ஆற்றல் மிக்க பேச்சால் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தவர் சீதாராம் யெச்சூரி.
1996-ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து யெச்சூரி முக்கிய பங்களிப்பை வழங்கினார். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
1975-ல், ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, அவசரநிலை காலத்தில் கைது செய்யப்பட்டார். 1977-78 இடையிலான ஓராண்டில் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.