முல்லைத்தீவில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் சுற்றுச்சூழல் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தொன்மை வரலாற்றை கொண்ட ஆலயமாக அமையும் இதன் சுற்றாடல் தூய்மையற்றதாக இருப்பது தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
ஈழத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட பிள்ளையார் கோவில்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு குமுழமுனையில் உள்ள கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்தின் முன்றல் மற்றும் அதன் சுற்றாடல் தூய்மையற்றதாக இருப்பது தொடர்பில் ஆலய நிர்வாகம் ஏன் இதுவரையில் கவனமெடுக்காது இருக்கின்றது எனவும் கேள்வியெழுப்பப்படுகின்றது.
ஆலய முன்றல்
குமுழமுனைச் சந்தியில் இருந்து தண்ணிமுறிப்புக்குச் செல்லும் பிரதான பாதையின் அருகில் அமைந்துள்ளது கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில்.
இந்த ஆலயம் தலைவெட்டிப் பிள்ளையார் ஆலயம் எனவும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது.
ஆங்கிலேயருடனும் ஆனையை அடக்கிய அரியாத்தையுடனும் தொடர்புபட்ட வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ள ஆலயமாக இது இருக்கின்றது.
இந்த ஆலயத்தின் அருகில் நாகதம்பிரான் ஆலயமும் குன்றில் குமரன் ஆலயமும் அமைந்துள்ளது.
ஆலயத்தின் முற்பகுதியில் வீதியின் அருகில் பால்பண்ணை ஒன்றும் அமைந்துள்ள சூழலில் ஆலயச் சுற்றாடல் தூய்மையாக பேணப்படுதல் அவசியமாகும்.
ஆலயத்தின் முன்றலில் கால்நடைகளால் ஏற்படுத்தப்படும் சூழல் மாற்றமானது காலை ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் மனங்களில் பொருத்தப்பாடற்ற எண்ணவலைகளை தோற்றுவிக்கின்றது.
ஒவ்வொரு நாள் காலையிலும் ஆலயத்தின் முன்றலில் உள்ள குப்பைகளை அகற்றி மாட்டுச் சாணங்களையும் அகற்றி அவ்விடத்தினை பெருக்கி தூய்மையாக பேணலாம்.
அத்தகைய செயற்பாடுகள் காலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அவர்களது மனதிலும் தூய்மையான அமைதியான மனநிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆலயத்திற்கு இரு பக்கங்களிலும் இரு நீர்நிலைகள் உள்ளன.ஒன்று கொட்டுக் கிணற்று பிள்ளையாருக்குரிய தீர்த்தக் கேணி.மற்றையது நாகதம்பிரான் ஆலயத்தின் தீர்த்தக் கேணி என அவ்விரு நீர் நிலைகளையும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ர்நிலைகளை உடைய ஆலயச் சூழலை பசுமையான பூந்தோட்டமாக மாற்றி பூங்கன்றுகளை நாட்டி வளர்த்தெடுக்கலாம்.
குமுழமுனையின் இளந்தலைமுறையினரை ஆலய வழிபாடுகளிலும் சரியைத் தொண்டுகளிலும் ஈடுபாடு காட்டும் படி வழிகாட்டப்படும் போது ஆலயச்சூழலை தூய்மையாகவும், அழகாகவும் பேணிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கி வளர்த்தால் அவர்கள் காலத்திலாவது நன்றாக பேணப்படும் என இது தொடர்பில் குமுழமுனை வாழ் வயோதிபர் சிலருடன் பேசிய போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆலயத்தின் உட்பகுதியும் வெளிச் சுற்றாடலும் எந்நேரத்திலும் தூய்மையாகவும் அழகாகவும் பசுமையாகவும் பேணப்படும் வகையில் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் இருக்க வேண்டும்.
ஆயினும் அவர்கள் திருவிழாக் காலங்களில் மட்டுமே சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் என அக்கிராமவாசியொருவர் தன் ஆதங்கத்தினை பகிர்ந்து கொண்டார்.
மூன்று கிராம சேவகர்களைக் கொண்ட ஒரு இடமாகவே குமுழமுனை இருந்து வருகின்றது. அத்தனை மக்களுக்கும் இருக்கும் பரம்பரை ஆலயமாகவும் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
சுற்றுச் சுழலில் கவர்ச்சிகரமான, நேர்த்தியான கட்டமைப்புக்களை உருவாக்கி, தனித்துவமான ஒரு எழில்கோலத்தை பெற்றுக்கொடுக்க, கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலின் ஆலய நிர்வாகம் முனைப்போடு பணிகளை முடுக்கிவிடுமா?